வரலாற்று சிறப்பு மிக்க நாகராஜர் கோவில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ளது. இங்கு நாகராஜர்கோவில்
ஏற்பட்டதற்கு பல கர்ண பரம்பரைக் கதைகள் கூறப்படுகின்றன.
புல், புதர்களுடன், செடி, கொடிகள் என்று இருந்த இந்தக்காட்டில் புல் அறுக்கும் பெண் ஒருத்தி, மாட்டிற்குப்புல்
அறுக்கும்போது, அவள் கையிலிருந்த அரிவாள் ஐந்து தலைநாகம் ஒன்றின் தலையில்பட்டு ரத்தம் பீறிட்டது.
இதைக்கண்டு
பயந்து நடுங்கிய அப்பெண், பக்கத்தில் உள்ள கிராம மக்களை அழைத்து வந்தாள்.
அவர்கள் கூட்டமாக வந்து பார்க்கும்போது, அந்த ஐந்து தலைநாகம் சிலையாக காணப்பட்டது. கிராமமக்கள், ஒரு சிறிய
தென்னங்கீற்றால் வேயப்பட்ட கூரைக்கோவில் கட்டி வழிபட்டு வந்தனர்.
நாளடைவில் அக்கம் பக்கத்து கிராமமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, நாகராஜரை தரிசித்துச் சென்றதில், ஆலயம் மிகப்
பிரபலமாயிற்று.
தமிழகத்துக்கோவில்களில் வேறேங்கும் காணப்படாத தனிச்சிறப்பு, ஆலயத்தின் மூலஸ்தானத்தின் மேல்கூரைத் தென்னை
ஓலையால் வேயப்பட்டதாகும்.
உதய மார்த்தாண்டவர்மா மன்னர், இக்கோவிலை புதுப்பித்து கொண்டிருந்தபோது, ஒருநாள் அவர் கனவில் நாகராஜர் தோன்றி,
ஓலைக்கூரையாலான இருப்பிடத்தையே நான் மிகவும் விரும்புகிறேன். முதன் முதலில் அக்கூரையினடியில் தான் வாசம்
செய்தேன். ஆதலால் அதை மாற்ற வேண்டாம்'' என்று கூறினார்.
அக்கூரையில் எப்போதுமே ஒரு நாகப்பாம்பு காவல் புரிகிறது என்றும், வருடதோறும் கூரைவேயப்படும் போது ஒரு பாம்பு
வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இக்கோவிலின் அர்ச்சகர்கள் கேரளாவிலுள்ள, ''பாம்பே காட்டு இல்லம்'' என்ற
குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
பரம்பரை பரம்பரையாகவே நாகத்தை வழிபடுபவர்கள்.
ஓலையாலான மூலஸ்தானத்தில் நாகராஜர் அமர்ந்துள்ள இடம் எப்போதும் ஈரமாகவே இருப்பதும், அங்கிருந்து எடுக்கப்படும்
மண்ணே இக்கோவிலின் முக்கிய பிரசாதமாகும். இம்மண் ஆறுமாதகாலம் கறுப்பு நிறமாக இருந்து வருகிறதாம்.
எவ்வளவோ காலமாக எடுத்தும் அம்மண் குறையாமல் இருப்பது நாகராஜனின் ஒப்பற்ற அருளைக் குறிக்கிறது என்று
சொல்கிறார்கள்.
கூரைவேயப்பட்டிருக்கும் மூலஸ்தானத்திற்கும் பின்னால் தொழுநோய் போன்ற பதினெட்டு நோய்களை குணப்படுத்தும்
`ஓடவள்ளி' என்ற ஒரு பச்சிலைக்கொடி படர்ந்திருந்ததாகவும், அதனடியில் தன் இனத்துடன் குட்டி குஞ்சுகளுடன் நாகங்கள்
குடியிருந்தனவாம்.
அதனை பக்தர்களின் பயத்தினால் அகற்றி விட்டாÖர்களாம்.
அக்காலத்தில் பிரசாதத்தை `ஓடவள்ளி', இலையில் கொடுப்பார்களாம். ஒவ்வொரு `ஓடவள்ளி' இலையும், ஒவ்வொரு
சுவையுடன் இருக்கும்.
இப்பொழுது பிரசாதம், புற்று மண்ணும், சந்தனமும் வாழை இலையில் கொடுத்து வருகிறார்கள். அம்மன் கோவிலில் மட்டும்
குங்குமம் பிரசாதம் கொடுக்கப்படுகிறது.
தேவைப்பட்டவர்களுக்கு கிலோ கணக்கில் புற்றுமண்னை விலைக்கு தருகிறார்கள்.
ஆண்டுதோறும் இவ்வாலயத்தில் `தை' மாதத்தில் அனந்தகிருஷ்ணன் முன்னுள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றி, பத்து நாட்கள்
திருவிழா கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள். ஆவணி மாதம் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பாகத் திருவிழா
நடைபெறுகிறது.
என்றாலும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படும் திருவிழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறுகின்றனர்.
அதுசமயம் பக்தர்கள் கூடி, உப்பு, மிளகு, பசும்பால், மரத்தினாலான மரப்பொம்மைகள் என காணிக்கைகளை செலுத்தி,
நாகராஜனை தரிசித்து அருள் பெறுவதற்கு வழிபடுகின்றனர்.
நாகதோஷங்களை ஒழிக்க இது ஒரு புண்ணியதலமாக விளங்குகிறது. பிள்ளைப்பேறு வேண்டுவோர் நாகச்சிலைகளால்
சூழப்பட்ட இந்த அரச மரங்களைச்சுற்றி வலம் வந்தால் பலனடைவர் என்ற நம்பிக்கையும் உள்ளது.
No comments:
Post a Comment